உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காதலனை கட்டிப்போட்டு 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-03-31 18:29 IST   |   Update On 2022-03-31 18:29:00 IST
காதலனுடன் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டு விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 23-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்றனர்.

காதலர்களான இவர்கள் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டு விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்பு அந்த நபர்கள் இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் நகைகளை பறித்துச் சென்று விட்டனர்.

தனது கண்முன் தன்னுடைய காதலியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனை அடைந்த ஹரிகிருஷ்ணன் வி‌ஷம் குடித்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வி‌ஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோதே, கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்களை கண்டுபிடித்து கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.

சாயல்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மாஸ்வரன் (24), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நத்தகுளம் தினேஷ்குமார் (24), அஜித்குமார் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்தனர். அவர்களில் பத்மாஸ்வரன், தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான அஜித்குமார் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் காதலன் ஹரிகிருஷ்ணன் வி‌ஷம் குடித்த தகவலை அறிந்த கல்லூரி மாணவியும் வி‌ஷம் குடித்தார். அவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியிடம், அருப்புக்கோட்டை முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட்டு மணிமேகலை வாக்குமூலம் பெற்றார்.

அதில் ரவுடிகள் 3 பேரும் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. மாணவியின் இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News