உள்ளூர் செய்திகள்
தற்கொலை

அயனாவரத்தில் தாய் இறந்ததால் சோகம்: 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-03-31 10:25 IST   |   Update On 2022-03-31 10:25:00 IST
மனைவி இறந்த சோகம் அடங்குவதற்குள் மகளும் பலியான சம்பவம் சுப்பையாவை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அம்பத்தூர்:

சென்னை அயனாவரம் பி.இ. கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி தாட்சாயிணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

இதன் பிறகு மகள் பவதாரினி, மகன் கல்யாண் இருவரையும் சுப்பையாவே கவனித்து வந்தார்.

டெய்லரான சுப்பையா வில்லிவாக்கத்தில் கடை வைத்துள்ளார். வேலை முடிந்து தினமும் மாலையில்தான் அவர் வீடு திரும்புவார்.

கடந்த 2 ஆண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தாயை மகள் பவதாரினிதான் பார்த்துக் கொண்டார். தாய்க்கு தேவையான உதவிகளை அவரே முன்நின்று செய்தார்.

இந்த நிலையில்தான் தாயின் மரணம் பவதாரினியை நிலைகுலைய செய்துள்ளது. எப்போதும் அவரது நினைவாகவே இருந்து வந்த பவதாரினி இதுபற்றி பலமுறை குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தாயின் மறைவால் மிகுந்த சோகத்தில் இருந்த பவதாரினி நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தனது நோட்டு புத்தகத்தில் கடிதம் ஒன்றை பவதாரினி ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்.

அதில், “சாவை நோக்கி நான் செல்கிறேன். எல்லாம் முடிந்து போய் விட்டது” என்று உருக்கமாக எழுதி உள்ளார். மனைவி இறந்த சோகம் அடங்குவதற்குள் மகளும் பலியான சம்பவம் சுப்பையாவை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Similar News