உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் பெரிய நந்திக்கு அபிஷேகம், தங்க ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் உலா வந்த காட்சி.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-03-30 15:05 IST   |   Update On 2022-03-30 15:05:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை:

சிவனின் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில். 

இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினங்களில் பெரிய நந்திக்கு உள்பட மூலவர் முன்பு ஒவ்வொரு பிரகாரத்திலும் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

நேற்று மாலை பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் மூலவருக்கு முன்பு தங்கக் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.  இதேபோல் பெரிய நந்திக்கும் அனைத்து அபிஷேகங்களும் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அண்ணாமலைக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

இதேபோல் திருவண்ணா மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் உள்ள நந்திகளுக்கும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.

அங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாடுகளை வெளியூர் பக்தர்களும் கண்டு மகிழ்ந்தனர்.

Similar News