உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை அருகே ஆடுகள் திருடும் கும்பல் அட்டகாசத்தால் கிராம மக்கள் பாதிப்பு

Published On 2022-03-30 15:05 IST   |   Update On 2022-03-30 15:05:00 IST
திருவண்ணாமலை அருகே ஆடுகள் திருடும் கும்பல் அட்டகாசத்தால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.விவசாயம் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைப்பதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் பகுதியில் ஆடுகள் திருடும் கும்பல் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மஷார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

அப்போது ஆடுகள் போட்ட சத்தத்தால் விழித்தெழுந்த சுரேஷ் வெளியே வந்து பார்த்தபோது அவர் வளர்த்து வந்த ஒரு ஆடு மட்டும் நின்றது. மற்ற 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் செல்வதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மர்ம நபர்களை தேடி சென்றுள்ளனர்.அதற்குள் ஆடு திருடும் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

இதுபற்றி அறிந்த விவசாயிகள் விடிய விடிய விழித்திருந்து திருடர்களை தேடியுள்ளனர். திருட்டு போன 2 ஆடுகளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் செய்யாததால் தொடர்ந்து ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருடர்களைப் பிடித்து ஆடுகளை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News