உள்ளூர் செய்திகள்
பாஜக

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி

Published On 2022-03-28 16:03 IST   |   Update On 2022-03-28 16:03:00 IST
புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்காததால் அதிருப்தியில் இருந்தனர். தங்களின் அதிருப்தியை கட்சி மேலிட பொறுப்பாளரிடம் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் இருந்தாலும் பா.ஜனதா உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதேபோல புதுவையிலும் பா.ஜனதாவின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தனித்து போட்டியிட தயாராகும்படி பா.ஜனதாவினருக்கு மேலிட தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தங்கள் பகுதியில் உள்ள கொம்யூன், நகராட்சி வார்டுகளில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது. விசாரணையில் அரசு தரப்பில் தேர்தலை நடத்த கால அவகாசம் கோர முடிவு செய்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அளிக்க உள்ள உத்தரவை பொறுத்து புதுவையில் உள்ளாட்சி தேர்தல், கூட்டணி விவகாரம் சூடுபிடிக்கும்.

Similar News