உள்ளூர் செய்திகள்
இணையதள சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

உரிமம் பெற இணையதள சேவை-ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Published On 2022-03-28 09:47 GMT   |   Update On 2022-03-28 09:47 GMT
தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமம் பெற இணையதள சேவையை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் தொழிலாளர் துறை, தேசிய தகவலியல் மையம் மூலம் பல்வேறு இணையதள வசதிகளை செயல்படுத்தி வருகிறது.

இணையதள வசதிகளை மேலும் எளிமையாக்க மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சர்வீஸ் பிளஸ் என்ற இணையதள கட்டமைப்பு வழியாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பயனாளி சேவையை பெற பதிவு செய்ய வேண்டும். 

பின்னர் சேவையை தேர்ந்தெடுத்து, கடைகள், விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் தொழில் நிறுவனங்களை தொடங்க, உரிமம் பெற, பதிவு செய்ய, பதிவை புதுப்பிக்க முடியும். 

துறையின் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமம், சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய இணையதள சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள கேபினட் அறையில்  தொடங்கி வைத்து பதிவு செய்ததற்கான உரிமம், சான்றிதழை வழங்கினார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா, தொழிலாளர் துறை செயலர் சுந்தரேசன், ஆணையர் மோகன்குமார், தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் முருகையன், தொழிலாளர் அதிகாரி கண்ணபிரான் மற்றும் தேசிய தகவலியல் மைய அதிகாரிகள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். 

இந்த புதிய இணையதள வசதியை செல்போன் மூலமும் பயன்படுத்தலாம். இதன்மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் பயன்பெறுவர். ஒவ்வொரு காலகட்ட பரிசீலனையிலும் விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப்பதாரர் அறிந்து கொள்ளலாம்.
Tags:    

Similar News