உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

முழு அடைப்பை கைவிட வேண்டும்- வர்த்தக சபை வேண்டுகோள்

Published On 2022-03-28 14:56 IST   |   Update On 2022-03-28 14:56:00 IST
நாளை நடைபெற உள்ள முழு அடைப்பை கைவிட வேண்டும் என வர்த்தக சபை தலைவர் குணசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை வர்த்தக சபை தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடத்திட திட்டமிட்டுள்ளதாக அறிந்தோம். 

உங்களது கோரிக்கைகள் மற்றும் உங்கள் அனைவரின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்துகொள்கிறோம். அதற்கு புதுச்சேரி வர்த்தக சபை மற்றும் தொழில் மற்றும் வணிகப்பெருமக்கள் துணை நிற்பார்கள். 

ஆனால்  அதே வேளையில் 29-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் எற்கனவே பல்வேறு காரணங்களால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் வணிகர்களுக்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பல்வேறு வணிகர் அமைப்புகள் புதுச்சேரி வர்த்தக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து திட்டமிடப்பட்டுள்ள முழு அடைப்பை கைவிட வலியுறுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை  வேலை வாய்ப்புகள் என்பது தற்போது வணிகர்களாலே பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட நடுத்தர மக்கள்  பலனைடைந்து வருகிறார்கள். முழு அடைப்பு நடத்துவதால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும், மேலும், நடத்தப்படும் முழு அடைப்புகளால் சிறு, குறு, பெரு வணிகர்கள் மட்டுமின்றி அன்றாட வணிகர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். 

புதுவை மாநிலத்திற்கான பெருவாரியான வருவாய் வணிகர்களாலே வரிகள் மூலமாக வசூலித்து தரப்படுகிறது. இதுபோன்ற சூழலில் முழு அடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்துவதால் வரி வருவாயில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சியையே அது பாதிக்கும். 
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய் பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நமது மாநிலத்தின் தொழில் மற்றும் வணிகம் தற்போது தான் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது. ஆனால் இந்த முழு அடைப்பு  நடத்தப்பட்டால் மேலும் பாதிப்பையே உருவாக்கும். 

பொருட்கள் வாங்க வருகை தரும் அண்டை மாநில மக்களின் வருகை குறைந்ததால் மேலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள புதுவை வணிகம்  முழு அடைப்பு போராட்டங்களால் மேலும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதனை களையும் பொருட்டும் புதுவை தொழில் வணிகப்பெருமக்கள் நலன் கருதியும் வரும் காலங்களில் முழு அடைப்பை முழுவதுமாக கைவிடவேண்டும் என  அனைத்து கட்சிகள், தொழிற் சங்கங்கள், சமூக இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் புதுச்சேரி வர்த்தக சபை வேண்டுகோள் விடுக்கின்றது. 

முழு அடைப்பு போராட்டத்தை கைவிட்டு மாற்றுவழி போராட்டங்களை மேற்க்கொள்ள வேண்டு மென  புதுச்சேரி வர்த்தக சபையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News