உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பஸ் வசதி இல்லாததால் 6 கி.மீ. தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

Published On 2022-03-28 14:40 IST   |   Update On 2022-03-28 14:40:00 IST
பெரம்பலூர் அருகே சரியான நேரத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் தினமும் 6 கி.மீ. தூரம் நடந்து செல்கிறார்கள்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மருவத்தூர், குரும்பபாளையம், பனங்கூர், கொட்டாரை, ஆதனுர் உள்ளிட்ட 6 கி.மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி அமைவிடத்தில் இருந்து பனங்கூர் பகுதி 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த பகுதிக்கும் பள்ளி நேரத்தில் போதிய பஸ்வசதி கிடையாது.

ஆனால் கொட்டாரை, ஆதனூர், குரும்பபாளையம் பகுதிகள் பள்ளியில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் பல ஆண்டுகளாக நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்.

குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் ரகு கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு காலையில் 6 மணிக்கும், 9.30 மணிக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி நேரத்தில் பஸ்கள் இல்லை. இதனால் பள்ளிக்கு செல்ல ஒரு மணிநேரம் நடக்க வேண்டி இருக்கிறது. பள்ளி சென்றடையும்போது உடல் தளர்ந்து விடுகிறது. இதனால் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

மாலையில் பஸ்சுக்காக காத்திருக்க முடியும். காலையில் பள்ளிநேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6ம் வகுப்பில் இருந்து இதுநாள் வரை நடந்தே பள்ளிக்கு செல்கிறேன் என்றார்.

கோட்டக்கரை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் கூறும்போது, பள்ளியில் 8.30 மணிக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கி விடுகிறது. 9.30 மணிக்கு வரும் பஸ்சில் சென்றால் 10 மணிக்குதான் பள்ளிக்கு செல்ல முடியும். சிறப்பு வகுப்பிற்கு செல்ல முடியாது. ஆகவேதான் நடந்து செல்கிறோம் என்றார்.

10 ஆம் வகுப்பு மாணவனின் தந்தை செந்தில்குமார் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கிறார்கள். சம்பந்தபட்ட போக்குவரத்து கழகத்திற்கு பலமுறை மனு  அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் வேதனையுடன்.

Similar News