உள்ளூர் செய்திகள்
கடைகளுக்கு சீல்

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: ஊட்டி, கூடலூரில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 7 கடைகளுக்கு சீல்

Published On 2022-03-28 10:39 IST   |   Update On 2022-03-28 10:39:00 IST
கலெக்டர் அம்ரித் தலைமையில் அதிகாரிகள் ஊட்டியிலும், குன்னூர், கூடலூர் பகுதிகளிலும் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர், குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா? என்பதும் குறித்தும் அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை மேற்கொண்டு, அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு அபராதம் விதிப்பதால் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியாது. பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டால் உடனே அந்த கடையை மூடி சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்பேரில் நேற்று முன்தினம் கலெக்டர் அம்ரித் தலைமையில் அதிகாரிகள் ஊட்டியிலும், குன்னூர், கூடலூர் பகுதிகளிலும் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

நேற்று தொடர்ந்து 2-வது நாளாக கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், ஊட்டியில், நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீதரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வைரம், மாசுகட்டுபாடு வாரிய உதவி மேலாளர் புனிதா தலைமையிலான குழுவினர் கடைகள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 5 கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய வணிக நிறுவனத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல், கூடலூரில், ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமையில் ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் 50 கடைகளில் சோதனை செய்து, 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

Similar News