உள்ளூர் செய்திகள்
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்-சிவா எம்.எல்.ஏ. அறிவிப்பு
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எதிர்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் தெகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்படும். அந்த குழு யாரை பரிந்துரை செய்கிறதோ அவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்காது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல் மகத்தான வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற வேண்டும். புதுவை நகரமன்ற தலைவர் பதவியை தி.மு.க. பிடிக்க வேண்டும். அந்தவகையில் நாம் பணியாற்ற வேண்டும்.
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடைபெறுகிறது.புதுவை வழியாக தமிழகம் செல்ல வேண்டும் என்றும் பா.ஜனதா நினைக்கிறது. அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அவர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சபாநாயகர் என்பவர் பொதுவானவராக இருக்க வேண்டும். எதிர்கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் நடுநிலையாக இருந்து மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆனால் புதுவை சபாநாயகர் பா.ஜனதா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பாஜனதாவினராக முன்னிறுத்தி வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது, கண்டிக்கத்தக்கது. எம்.எல்.ஏ. நம்பிக்கை ஏற்படும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும். இல்லையென்றால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.