உள்ளூர் செய்திகள்
படகு குழாமில் பாரா கிளைடர் சாகச விளையாட்டு
நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை கருதி ஆன்லைன் மூலம் பதிவு முறை ஏற்பாடு செய்ய அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சுற்று லாத்துறையின் கீழ் நோணாங்குப்பம் சுண்ணாம் பாறு படகு குழாம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து பல்வேறு விதமான படகுகள் மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். அங்கு பல்வேறு விதமான விளையாட்டுகள் நடத்தப் பட்டு வருகிறது.
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புது விதமான பாரா கிளைடர் எனும் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் அரசு செயலர்கள் அருண், நெடுஞ்செழியன் ஆகியோர் தனித்தனியே பாராகிளைடரில் சிறிது பறந்து மகிழ்ந்தனர்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணல்பரப்பில் செல்லக்கூடிய ஏ.டி.வி. காரினை ஓட்டி மகிழ்ந்தார். அதில் பெரும்பாலானோர் இந்த பாரா கிளைடரில் கட்டணம் செலுத்தி பறந்து மகிழ்ந்தனர். இதற்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயித்துள்ளனர்.
தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பாரடைஸ் பீச்சை ஆய்வு செய்தார். பலத்த காற்றினால் சேதமான குடில்களை சரி செய்து இந்தக் கோடை காலத்திற்கு சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து நேரம் ஒதுக்கி பயனடைய ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது படகு குழாம் மேலாளர் மனோஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.