உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருகாப்பு கட்டுதலைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச் சியில் தேவகோட்டை பெரியகாரை, அடசிவயல், கோட்டூர், நயினார்வயல், கள்ளிக்குடி, நாகாடி புதுக்கோட்டை, திருமண வயல், பரமக்குடி மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றியுள்ள 100&க்கும் மேற் பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இறுதி விழாவாக பூச்சொரிதல்விழா, அம்மன் திருவீதிஉலா, அதனை தொடர்ந்து பால்குடம், காவடி, தீச்சட்டியும், இரவு முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமையும், மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதேபோன்று முளைப்பாரி திருவிழா கோட்டூர், நாகாடி பெரியகாரை, கள்ளிக்குடி அடசிவயல், சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடைபெறுகிறது.