உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

குவாரியை மூட கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Published On 2022-03-23 06:50 GMT   |   Update On 2022-03-23 06:50 GMT
குவாரியை மூட கோரி கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட திருவிளக்குறிச்சி, பெருமாள்பாளையம் ஆகிய கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக் கிராமத்திலுள்ள பெருமாள் மலை கிரிவல பாதை அருகேயுள்ள கிணற்று நீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனராம்.

இந்நிலையில், அந்தக் கிணறு அருகேயுள்ள குவாரியிலிருந்து வரும் புகை மற்றும் மண் துகள்கள் கிணற்று நீரில் படிந்து அசுத்தமாகிறது. இதனால், அந்த கிணற்று தண்ணீரை குடிப்பதால் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அங்குள்ள மற்றொரு குவாரி உரிமையாளர் சுமார் 500 அடி ஆழம் தோண்டி கற்களை எடுத்துவிட்டதால், பொதுமக்களுக்கு வரும் ஏரி தண்ணீர் குட்டையில் தேங்கியுள்ளதாம். அந்த தண்ணீரை குவாரிக்கு பயன்படுத்திவிட்டு, அதன் கழிவுகளை அங்குள்ள ஓடையில் கொட்டுகின்றனராம். இதன் காரணமாக ஏரி நீர் மாசுபடுவதோடு, நச்சுக் கலந்த நீரை பயன்படுத்துவதால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறதாம்.

மேலும் அனுமதியின்றி செயல்படும் குவாரியிலிருந்து அதிகளவில் கல் உடைத்து எடுக்கின்றனராம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், அனுமதியின்றி செயல்படும் குவாரியை ரத்து செய்து, கழிவுகளை ஓடையில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

அதிக அளவில் புகை மற்றும் மண் துகள்கள் வெளியேறுவதை த டுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்து விட்டுகலைந்து சென்றனர்.
Tags:    

Similar News