மஞ்சூர் அருகே டீ கடையை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடி ஒன்று நடமாடி வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு குந்தா தாலுகா அலுவலகம் அருகே உலா வந்த கரடி அங்குள்ள ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான டீ கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி சென்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் கொட்டரகண்டி தாலுகா அலுவலகம் அருகே சாலையோரம் கரடி பதுங்கியிருந்துள்ளது.
இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு கரடியை விரட்டியுள்ளனர். இதை தொடர்ந்து கரடி மீண்டும் வராமல் இருக்க அப்பகுதியில் டயரை கொளுத்தி தீயிட்டுள்ளதுடன் இரவு 10 மணி வரை காவல் இருந்துள்ளனர்.
இதை தொடர்ந்து இளைஞர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள். இந்நிலையில் ஆட்கள் நடமாட்டம் முழுவதுமாக ஓய்ந்த போன நிலையில் 11 மணிக்கு மேல் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி மீண்டும் ராஜமாணிக்கத்தின் டீ கடை கதவை உடைத்தெறிந்து உள்ளே புகுந்துள்ளது.
தொடர்ந்து கடையில் இருந்த பாத்திரங்கள், சமையல் பொருட்களை கீழே தள்ளி சூறையாடியதுடன் கேனில் இருந்த எண்ணெயை குடித்து சென்றுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலை கரடியால் சூறையாடப்பட்ட ராஜமாணிக்கத்தின் டீ கடையை பார்வையிட்டனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை ஒட்டியுள்ள தேயிலை தோட்டம் மற்றும் பெரியார்நகர் பகுதிகளில் கரடியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கரடி அப்பகுதியில் நடமாடி வருவது கொட்டரகண்டி பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.