உள்ளூர் செய்திகள்
மில் ஊழியரை கடத்திய வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மில் ஊழியரை கடத்திய வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 25). இவர் பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (35). இவர் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரூ.2.50 லட்சம் கொடுத்தால் அதை இரட்டிப்பு தொகையை வழங்குவதாக ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தியிடம் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்திடம் ரூ.1.50 லட்சம் கொடுத்தார். ஆனால் பணம் கொடுக்காமல் ராமலிங்கம் ஏமாற்றி வந்தார்.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்தை நண்பர்கள் துணையுடன் திருப்பூருக்கு காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ராமலிங்கம், பணத்தை சிலம் பரசன் என்பவரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே ராமலிங்கத்தின் மனைவி செண்பகம், தனது கணவரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி சென்று விட்டதாக மத்தூர் போலீசில் புகார் செய்தார். இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்தை ஊருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய ராமலிங்கம், இதுபற்றி மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்தூரில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
இந்த நிலையில் பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் மேலபுழுதியூர் பெரும்பட்டம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (31), மத்தூர் அருகே ஓட்டப்பட்டியை சேர்ந்த நாகேஷ்(31) ஆகிய 2 பேரை நேற்று மத்தூர் கவுண்டனூரில் கைது செய்தனர்.
இந்த பண இரட்டிப்பு மோசடி வழக்கில் சிலம்பரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.