உள்ளூர் செய்திகள்
இணைய மோசடியில் இழந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைப்பு
இணைய மோசடியில் இழந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டுபோன மற்றும் காணாமல்போன கைப்பேசிகள் மற்றும் இணையதள மோசடி மூலமாக இழந்த தொகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளார் தலைமையிலான குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 30 கைப்பேசிகள் காணாமல் போனதாக அளித்த புகார்களில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 கைப்பேசிகளும், கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் கார்டு மோசடி, இணையவழி விளையாட்டு மோசடி, இணையவழி வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் மூலம் 11 பேர் பணத்தை இழந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ரூ. 1.25 லட்சம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளார் அலுவலக கூட்டரங்கில் பாதிக்கப்பட்டோரிடம் கைப்பேசிகள் மற்றும் மீட்கப்பட்ட தொகையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்தார்.
இதில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 கைப்பேசிகளும், ஆன்லைன் மோசடி மூலம் இழந்து பிறகு மீட்கப்பட்ட ரூ. 1,25,540 ரொக்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.