உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் அனுமதி
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கிட கோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தார்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு, ஜல்லிக்கட்டு பேரவையினரும், கிராம மக்களும் பல லட்சம் ரூபாய் செலவில் பிப்ரவரி மாதம் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் காரணமாகக் கூறி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், கடந்த 1&ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன்பேரில் ரூ. 10 லட்சம் செலவில் பல்வேறு முன்னேற்பாடுகளை விசுவக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர். இந்நிலையில், போட்டி நடத்துவதற்கு முன்தினம் இரவு எவ்வித காரணமும் கூறாமல் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விசுவக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், ஓரிரு நாள்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குவதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு வாரங்கள் கடந்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக அனுமதி வழங்கிட கோரியும் 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தார்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வரும் 26&ந் தேதி விசுவக்குடியிலும், 30&ந் தேதி கள்ளப்பட்டியிலும், ஏப். 3&ந் தேதி அன்னமங்கலத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பதாக அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்