உள்ளூர் செய்திகள்
புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி கடையடைப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நகருக்கு மத்தியில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இடப்பற்றாக்குறை என காரணம் காட்டி அதனை நகருக்கு வெளியே 3 கி.மீ. தொலைவில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகருக்கு வெளியே புதிய பஸ்நிலையத்தை அமைக்காமல் தற்போதுள்ள பஸ்நிலையத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத அரசு மருத்துவமனை கட்டிடத்தை அகற்றிவிட்டு தற்போதுள்ள பஸ் நிலையத்தை நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புதிய பஸ்நிலையம் நகருக்கு வெளியே அமைக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வர்த்தகர்கள் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி இன்று திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இளையான்குடி நகர்ப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.