உள்ளூர் செய்திகள்
உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு நடந்தது.

அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறிய பக்தர்கள்

Published On 2022-03-14 16:15 IST   |   Update On 2022-03-14 16:15:00 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அம்மன் கோவிலில் மாசி திருவிழாவில் அரிவாள் மீது நின்று பக்தர்கள் அருள்வாக்கு கூறினர்.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூரில் கடம்பவன காமாட்சி அம்மன் கோவிலில்  நடந்த மாசி திருவிழாவில் பக்தர்கள் கரகம் சுமந்து சாமியாடி வந்து அரிவாள்மீது நின்று அருள்வாக்கு கூறினர். 

இந்த கோவிலில் மாசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் குடிமக்கள் கோவிலில் இருந்து மாலையில்  பூஜைப் பெட்டிகளுடன்  அருகே உள்ள வைகை ஆற்றுக்கு புறப்பட்டனர். இரவு வைகை ஆற்றில் இருந்து கரகம் சுமந்து சாமி ஆடியபடி மேளதாளம், வாண வேடிக்கையுடன்  கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். 

கோவிலுக்கு  அருகே சாமியாடிகள் அரிவாள் மீது நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினர். அதைத்தொடர்ந்து  காமாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று உள்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அதன்பின் மூலவர் காமாட்சி அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. 

2ம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் காலை சிவகணபதி கோவில் முன்பிருந்து காமாட்சி அம்மனுக்கு பால்குடங்கள் எடுத்து செய்களத்தூர் கிராமத்தை வலம் வந்து கோவிலுக்கு  வந்தடைந்தனர். அதன் பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் உலக நன்மைக் காக  திருவிளக்கு பூஜை  வழிபாடும் நடந்தது.   

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள நாகராஜன்,  அன்புக்குமார்,  யாழ்முருகன், முத்துப் பாண்டியன், திருஞானம், சரவணன், ராஜா, பழனியப்பன் மற்றும் கோவில்  பங்காளிகள் செய்திருந்தனர்.

Similar News