உள்ளூர் செய்திகள்
மானாமதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஊர்வலத்தை மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

கடைகளுக்கு சீரான வாடகையை வசூலிக்க கோரிக்கை

Published On 2022-03-10 16:08 IST   |   Update On 2022-03-10 16:08:00 IST
கடைகளுக்கு சீரான வாடகையை வசூலிக்க கோரி வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை

மானாமதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல பொதுக்குழு கூட்டம் மதுரை மண்டலதலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட தலைவர் பாலகுருசாமி வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா கால கட்டத்தில் வணிகர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பல பெரிய வணிகர்கள் தங்கள் தொழிலை இழந்துள்ளனர். 

ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு வணிகர்களின் சேவையை யாரும் மறக்க மாட்டார்கள். தற்போது ரஷ்யா&உக்ரைன் போரால் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏறும் அபாயம் உள்ளது. போரை காரணம் காட்டி மத்தியஅரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தகூடாது. வணிகர்களின் வாழ்வாதா ரத்தை அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்றார். 

பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன், கூடுதல் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திபேசினர். 

வருகிற மே 5ந்தேதி திருச்சியில் நடைபெறும் 39வது வணிகர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வ தால் மதுரை மண்டலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்பது, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான வாடகையை முறைப் படுத்தி அறிவித்து அதனடிப்படையில் வாடகை வசூலிக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வணிகர்களுக்கென என தனியாக மாதம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மானாமதுரை அண்ணா சிலையில் இருந்து மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நூற்றுக் கணக்கான வணிகர்கள் பேரணியாக நடந்து சென்றனர்.வழியில் ஆங்காங்கே வணிகர்சங்க கொடிகளை நிர்வாகிகள் ஏற்றிவைத்தனர். 

கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெகதீசன், கோவிந்தராஜ், ஜீவானந்தம், வீரபத்திரன், அழகேசன், சாதிக்அலி, சைமன் அன்னராஜ், திருருகன், ஆல்பின் சகாயராஜ், பாண்டியன், லட்சுமணன், பாண்டியன், பெத்துராஜ், சந்திரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News