உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் மாடுகள் சண்டை போட்டுக்கொண்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-03-10 15:56 IST   |   Update On 2022-03-10 15:56:00 IST
திருப்புவனத்தில் நடுரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான மாடுகள் பகல் நேரங்களிலிலும் இரவிலும் சாலையில் சுற்றித்திரிகின்றன. வீடுகளில் மாடுவளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாடுகளை ரோட்டில் விட்டுவிடுகின்றனர். இந்த மாடுகள் பல நேரங்களில் ரோடுகளை மறித்து நின்று தங்களுக்குள் முட்டிக்கொண்டு சண்டையிடுகின்றன. 

சாலைகளில் மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் மாடுகளின் மீது மோதி காயமடையும் சம்பவங்களும், உயிர்ப்பலி ஆபத்தும் உள்ளன. 

ரோட்டில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடமும்,  மாவட்ட நிர்வாகத்திடமும் திருப்புவனம் பகுதி பொது மக்கள் வலியுறுத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கப்பட வில்லை. 

இந்தநிலையில் திருப்புவனம் நகரில் சுற்றித்திரிந்த இரு மாடுகள் தங்களுக்குள் முட்டிக்கொண்டு சாலையை மறித்துக்கொண்டு சண்டையிட்டன. சண்டையிட்டபடி இந்த மாடுகள் வீதிகளில் இருந்த கடைகள் புகுந்து  அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தின. 

இதனால் கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இந்த மாடுகள் கீழே தள்ளின. இதனால் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 

சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை மாடுகள் முட்டி கீழே தள்ளின. சிலரை இந்த மாடுகள் சண்டையிட்டவாறு விரட்டி சென்றதைப் பார்த்து பொதுமக்கள், மாணவ&மாணவிகள்  மிரண்டு ஓடினர். அதன்பின் சிலர் மாடுகளை விரட்டியடித் தனர். ஆனாலும் மாடுகள் தனித்தனியாக ரோட்டில் சென்ற மக்களை விரட்டிச்சென்றன.  மாடுகள் சண்டை போட்டுக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 எனவே பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் திருப்புவனம் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Similar News