உள்ளூர் செய்திகள்
தேசியக்கொடி வர்ணத்தில் ஜொலிக்கும் நீர்த்தேக்க தொட்டி
சிங்கம்புணரி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தேசியக்கொடி வர்ணம் பூசப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம், கே.நெடுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபட்டி, பண்ணைபட்டி, காயாம்பட்டி, மேலான்தெரு, வெள்ளையங்குடிபட்டி, பழைய நெடுவயல், ஆகிய பகுதிகளில் சுமார் 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.
இதில் இருந்து நாள்தோறும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து புதிய நீர்த்தேக்க தொட்டிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
அந்த நீர்த்தேக்க தொட்டிக்கு கிராம மக்களிடையே தேசப் பற்றையும், ஒற்றுமையை உருவாக்கும் வகையில் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தை பூசி பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பலதரப்பட்ட சமுதாய மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல் என்பதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு மத்தியில் நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமை உணர் வையும் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக நம் நாட்டின் தேசிய கொடியின் வர்ணத்தை இந்த நீர்த்தேக்க தொட்டியில் ஏற்படுத்தி உள்ளேன்.
இன்னும் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இதேபோன்று வர்ணங்களை பூசி கிராமமக்களிடையே மதசார்பற்ற சமுதாய ஒற்று மையை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும் என்றார். சிவகங்கை மாவட்டத்தில் எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும், ஒரு முன்மாதிரி ஊராட்சியாக நாட்டுப்பற்றை பறைசாற்றும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரின் இத்தகைய முயற்சி வியக்கத்தக்கது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.