உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-09 14:01 IST   |   Update On 2022-03-09 14:01:00 IST
சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 30 அறிவிக்க கோரி கழுத்தில் வெங்காய மாலை அணிந்து விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் காரிப் மற்றும் ராபி பருவ காலங்களில் 75 ஆயிரம் ஏக்கரிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வரும் சின்ன வெங்காயத்துக்கு கிலோவுக்கு ரூ. 30 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும்.  

இக் கோரிக்கையை தமிழக அரசு பட்ஜெட்டில் சேர்த்து அறிவித்து விவசாயிகளின் நலன்காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கழுத்தில் வெங்காய மாலையை அணிந்து கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட பொருளாளர் மணி உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் அளித்தனர்.

Similar News