உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

தரமுத்திரையை பார்த்து பொருட்கள் வாங்க கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-03-06 17:51 IST   |   Update On 2022-03-06 17:51:00 IST
தரமுத்திரையை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய மற்றும் உலக  நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். விழாவில், அவர் பேசியதாவது:

1986ம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவு கூறுவதற்காவே  ஆண்டுதோறும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  நுகர்வோர் பாதுகாப்பு  சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் விற்பவரின் கடமைதான் அனைத்தும் என்றும், வாங்குபவருக்கு அதில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கவும் மற்றும் நிவாரணம் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

பொருட்களை வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களாவர். மக்கள் விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்கும்போது பொருட்களின் தரம், எடை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா என்பதை அறிந்து வாங்க வேண்டும். 

தரமற்ற, எடைக்குறைவு, மற்றும் போலியான பொருட்களை வாங்குவதையும், போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து தரமற்ற பொருட்களை வாங்குவதையும் நுகர்வோர் ஆகிய பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  போலி விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல், தெளிவான சிந்தனையுடனும், எச்சரிக்கையுடனும், தரமுத்திரையினை பார்த்து பொருட்களை வாங்கிட வேண்டும். 

எந்தவித தகவலும் அச்சிடப்படாத பொட்டல பொருட்களை வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். விலை அதிகமாக இருந்தால் அது தரமான பொருட்கள் என்றும், விலை குறைவாக இருந்தால் தரமற்ற பொருட்கள் என்ற எண்ணத்தை முற்றிலும் மாற்ற வேண்டும்.

உணவு மற்றும் மருந்து பொருட்களில் கலாவதி தேதி, சரியான விலை, அங்கீகரிக்கப்பட்ட முத்திரை உள்ளிட்ட விபரங்களை கவனமுடன் சரிபார்த்து வாங்கவேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சவுந்தரராஜன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரத்தினவேல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மங்களநாதன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர்  பிரபாவதி மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு கழக பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News