உள்ளூர் செய்திகள்
தவறவிட்ட பணப்பையை மீட்டு கொடுத்த பஸ் நிலைய பொறுப்பாளர்
தவறவிட்ட பணப்பையை மீட்டு கொடுத்த பஸ் நிலைய பொறுப்பாளர்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தத்தணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து அங்கு சாலையோர உணவகம் நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சித்ரா நேற்று மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். இதற்காக சித்ரா கிராமத்திலிருந்து தேவகோட்டைக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.
தேவகோட்டை பஸ்நிலையத்தில் அவர் இறங்கினார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த பேக்கை அரசு பஸ்சில் தவற விட்டார். அதில் ஒரு 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் இருந்தது.
பேக்கை எடுக்க செல்வதற்குள் அந்த பஸ் ஆவுடையார்கோயிலுக்கு புறப்பட்டு சென்றது. தன்னுடைய பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் செய்வதறியாது திகைத்த சித்ரா பஸ்நிலையத்தில் கண் கலங்கியபடி நின்றிருந்தார்.
இதனை பஸ் நிலைய பொறுப்பாளர் சந்தியாகு பார்த்து சித்ராவிடம் விசாரித்தார். அப்போது அவர் தான் பணப்பையை தவறவிட்ட விவரத்தை கூறினார்.
இதைத்தொடர்ந்து சந்தியாகு உடனே சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பஸ்சின் பின் இருக்கையில் ஏதேனும் பேக் உள்ளதா? என பார்க்குமாறு கூறினார்.அதன்படி கண்டக்டர் பார்த்தபோது பஸ்சின் பின் இருக்கையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
சந்தியாகு கொடுத்த தகவலின்படி பேக்கை எடுத்துக் கொண்ட கண்டக் டர் சிறிது நேரத்தில் தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பாளர் சந்தியாகுவிடம் ஒப்படைத் தார்.
பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்கள் பத்திரமாக இருந்தது. இதை பார்த்து சித்ரா நிம்மதி பெருமூச்சு விட்டார்.
பேக்கை தவறவிட்ட சில மணி நேரத்தில் அதனை மீட்க நடவடிக்கை எடுத்த பேருந்து நிலையப் பொறுப்பாளர் சந்தியாகு, அதற்கு உதவியாக இருந்த அரசு பஸ் கண்டக்டர் தமிழரசன், டிரைவர் பாலகிருஷ்ணன், ஊழியர் முத்துக்குமார் ஆகியோருக்கு சித்ரா நன்றி தெரிவித்தார்.