உள்ளூர் செய்திகள்
தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியர் தெய்வானை வரவேற்றார்.
1928ம் ஆண்டு பிப்ரவரி 28ந் தேதி இந்திய இயற்பியலாளர் சர்.சி.வி.ராமன், ராமன் விளைவை கண்டு பிடித்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ந்தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
மனித நலனுக்காக அறிவியல் துறையில் அனைத்து செயல்பாடுகள், முயற்சிகள் மற்றும் சாதனைகளை காட்சிப் படுத்த அறிவியல் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து சிக்கல்களையும் விவாதிக்கவும் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தவும் இது கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அறிவியல் மனப்பான்மை கொண்ட குடிமக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மக்களை ஊக்குவிப்பதுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் பேசினார்.
இதை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 115 பேருக்கும் சர்.சி.வி.ராமன் கண்டுபிடிப்புகள் பற்றிய புத்தகங்கள் வழங்கி சர்.சி.வி.ராமன் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அவரின் முகமூடி அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கண்ணகி, சகாயமைக்கேல் சாந்தி, தேவி, நீலகேசி, சுப்புலட்சுமி, மரகதம், மகாலட்சுமி, ராமலட்சுமி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.