உள்ளூர் செய்திகள்
சிவராத்திரி விழாவில் திரண்ட பக்தர்கள்
மானாமதுரை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த சிவராத்திரி விழாவில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள தஞ்சாகூர் ஜெகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி தவகோலத்தில் சிவபெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவிலின் பரம்பரை பூசாரிபால சுப்பிரயசுவாமி முன்னிலையில் கூடலூர் மகாசக்தி பீடஸ்தாபகர் சுந்தரமிவடிவேல் தமிழ் முறைப்படி பிரம்ம யாகத்தை நடத்தினார்.
இதில் மூலிகை பொருள்கள், மிகபெரிய பூசணிக்காய் போட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் மற்றும் நந்திக்கு சிறப்புமகா அபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. இதில் ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசி சிவலிங்கத்திற்கு 16 வகையான அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
4 கால பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். வைகை ஆற்றுங்கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் மேலநெட்டூர் சொர்ணேஸ்வீரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், பூரணசக்கரவிநாயகர், நம்பி நாகம்மாள், சங்குபிள்ளையார், வைகை கரை அய்யனார், இடைகாடர்சித்தர், கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடம் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி ஆகிய கோவில்களில் விடியவிடிய நடந்த சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.