உள்ளூர் செய்திகள்
தமிழக சட்டசபை

பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக சட்டசபை 18-ந்தேதி தொடங்க வாய்ப்பு

Published On 2022-03-02 11:15 IST   |   Update On 2022-03-02 11:15:00 IST
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவை கூடி அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கும். இதற்காக மார்ச் 5-ந்தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை தள்ளி வைக்கப்பட்டது.

இதன் பிறகு கடந்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சட்டசபையில் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். வர்த்தக அமைப்பினர், வணிகர் சங்கத்தினர் ஆகியோருடனும் கருத்துக்கள் கேட்டறிந்துள்ளார்.

தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அநேகமாக வருகிற 18-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. 19-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவை கூடி அதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கும். இதற்காக மார்ச் 5-ந்தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது.

Similar News