உள்ளூர் செய்திகள்
திடக்கழிவு மூலம் வருமானம் ஈட்டும் முயற்சி
வாராப்பூர் ஊராட்சியில் திடக்கழிவு மூலம் வருமானம் ஈட்டும் முயற்சிக்கு பஞ்சாயத்து தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூரில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் மலர்விழி நாகராஜன்.
இவர் பதவியேற்ற காலத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார்.
தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு இணங்க ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் சேகரிக்கும் குப்பை கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உதவியோடு மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டையும் வெவ்வேறாக எடை போட்டு, பிறகு அதனை தரம் பிரிக்கப்படுகிறது.
மக்காத குப்பைகளில் இருந்து கிடைக்கப்பெறும் பாட்டில், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பதோடு, மக்கும் குப்பைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை 35- லிருந்து 40 நாட்கள் வரை மக்கச்செய்து மீண்டும் அதனை சலித்து அதனுடன் கால்நடை கழிவுகளும், மண்புழுவையும் சேர்த்து 3 நாட்களுக்கு ஒரு தடவை கிடைக்கப்பெறும் நொதியினை இயற்கை மண்புழு உரமாக விவசாயிகளுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளார்.
அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ஊராட்சிக்கு கொடுத்து வருகிறார். மேலும் குப்பை கிடங்கின் மறுபுறம் பல்வேறு மரக்கன்றுகளை வளர்த்து அதனை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு செய்து பராமரித்து வருவதோடு, இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் வழங்கிவருகிறார்.
மத்திய சுகாதார திடக்கழிவு மேலாண்மை குழு இங்கு வருகைபுரிந்து இயற்கை மண்புழு உரம் தயாரிக்கும் பகுதியை ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனை பாராட்டியது.
நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் உள்ள கிடங்குகளில் நாள்தோறும் வீணாக கொட்டப்படும் குப்பை கழிவுகள் மலைபோல் காட்சியளித்து பயனற்று இருந்து வரும் நிலையில் வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவரின் இத்தகைய முயற்சியை சமூக ஆர்வலரும், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்களும் பாராட்டினர்.