உள்ளூர் செய்திகள்
சிவராத்திரி

ஜெகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

Published On 2022-02-27 16:28 IST   |   Update On 2022-02-27 16:52:00 IST
மானாமதுரை அருகே ஜெகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோவிலில் சிவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தென் மாவட்டங்களில் முதல்முறையாக இங்கு தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ள   சிவனுக்கு கும்பாபிஷேகம்,   மகாஅபிஷேகம் வருகிற 1&ந் தேதி (செவ்வாய்கிழமை) சிவராத்திரி தினத்தில் இரவு நடைபெறுகிறது.

தஞ்சாக்கூரில்  ஒரே இடத்தில்  ஜெகதீஸ்வரர், ஜெயம்பெருமாள், 18 சித்தர்களுடன் கூடிய சுப்பிரமணியர் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுப்ரமணியர் கோவில் தெப்பக்குளத்தில்  ராகு, கேது பகவானுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு இந்த கோவில்களுக்கு  அடுத்தடுத்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.  தற்போது சுப்பிரமணியர் கோவிலில்  தென் மாவட்டங்களிலேயே முதன்முதலாக தவக்கோலத்தில் சிவன் எழுந்தருளிஅருள் பாலிக்கும்சிலைபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜெகதீஸ்வரர் திரிபுரசுந்தரி  கோவிலில்  மாசி சிவராத்திரி விழாவும் தவக்கால சிவனுக்கு புனித நீர் அபிஷேகமும் நடைபெறுகிறது. முன்னதாக ஜெகதீஸ்வரர் கோவிலிலும்,  சுப்பிரமணியர் கோவிலிலும்  காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சுப்பிரமணியருக்கும், சிவனுக்கும், ஜெகதீஸ்வரர்  சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள்  தீபாராதனைகள் நடைபெற்றன.  விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1ந்தேதி ஜெகதீஸ்வர் சுவாமிக்கு 108 வகையான அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவராத்திரி நாட்களில் தினமும் ஜெகதீஸ்வரர் சுவாமிக்கும், சுப்பிரமணியருக்கும், சிவனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. 

தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள தவக்கோல சிவனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தஞ்சாக்கூருக்கு வருகை தருகின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பரம்பரை பூசாரி பாலசுப்பிரமணியசுவாமி  செய்துள்ளார். சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான    வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Similar News