உள்ளூர் செய்திகள்
விசாரணை

ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்- கல்வி அதிகாரி பள்ளியில் நேரில் விசாரணை

Published On 2022-02-26 16:17 IST   |   Update On 2022-02-26 16:17:00 IST
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை ஆட்டோ டிரைவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமைஆசிரியராக ராணி என்பவர் இருந்து வருகிறார். இந்த பள்ளியில் 4 பெண் ஆசிரியர்கள் உள்பட 12 பேர் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

இங்கு தலைமை ஆசிரியருக்கும், சக ஆசிரியர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை ஆட்டோ டிரைவர் ஒருவர் தாக்கி உள்ளார்.

அதனை தொடர்ந்து சக ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவரால் தாக்கப்பட்ட ஆசிரியர் தமிழ்வேந்தன் மருத்துவ விடுப்பில் சென்றார். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களை அழைத்து விசாரணை நடத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்ககூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

அதனை தொடர்ந்து கல்வி வளர்ச்சி குழு தலைவர்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆகியோருடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

Similar News