உள்ளூர் செய்திகள்
குன்னூரில் 2 கோவில்களில் கொள்ளை முயற்சி
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோடு பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இந்த கோவிலுக்கு மிக அருகில் பத்ரகாளியம்மன் கோவிலும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பத்ரகாளியம்மன் கோவிலுக்குள் மர்மநபர்கள் சிலர் நுழைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு ஏதாவது பணம் இருக்கிறதா என பார்த்துள்ளனர்.
ஆனால் அங்கு எதுவும் இல்லை என தெரிகிறது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே வந்தனர். அந்த கோவிலில் ஒன்றும் கிடைக்காததால் இங்கு உண்டியலில் உள்ள பணத்தை எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலின் நுழைவு வாயிலை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அங்குள்ள மற்றொரு கதவை திறக்க முயற்சித்தனர். அப்போது அந்த கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென சத்தம் எழுப்பியது. இதனால் பயந்து போன மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து உடனடியாக தப்பியோடி விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் வந்து பார்த்து விட்டு குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி பார்வையிட்டனர். விசார ணையில், மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து கொள் ளையடிக்க முயன்றதும், அலாரம் அடித்ததால் தப்பி யோடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கோவிலில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் யார் என்பதை அறிய அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகிறார்கள். ஒரே நாளில் அடுத்தடுத்த கோவில்களில் நடந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.