காரைக்குடியில் இருந்து சென்னைக்கு மின்சார என்ஜினுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ்
காரைக்குடி:
காரைக்குடி-திருச்சி ரெயில்வே பிரிவில் மின் மயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 17-ந்தேதி தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) காரைக்குடி வரை மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டது.
இன்று காலை 5 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் (12606) ரெயிலும் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு சென்றது.
தொடர்ந்து இனிமேல் மின்சார என்ஜின் மூலமாகவே ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி-சென்னை இடையே பயண நேரம் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்பு காரைக்குடியில் இருந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சியில் நிறுத்தப்பட்டு அங்கு மின்சார என்ஜினை மாற்றிய பிறகு புறப்பட்டு செல்லும் இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை அங்கு ரெயில் நிற்கும் நிலை இருந்து வந்தது. இனி அந்த நிலை இருக்காது என பயணிகள் தெரிவித்தனர்.