உள்ளூர் செய்திகள்
காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படுமா?
ஆண்களை விட அதிக இடத்தில் வெற்றி பெற்ற காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரைக்குடி
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளுக்கு தேர்தல் நடை பெற்று முடிந்துள்ளது. இதில் தி.மு.க 18 இடங்களிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், காங்கிரஸ் 3, கம்யூனிஸ்ட் 1, சுயேச்சை வேட்பாளர்கள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.திமுக கூட்டணி 22 இடங்களில வெற்றிபெற்றுள்ளது.
வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 1வது வார்டு கார்த்திகேயன் மற்றும் 30 வது வார்டின் விஷ்ணு பெருமாள் ஆகியோர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் நகர செயலாளர் குணசேகரன் முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்து துரை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
தற்போது தி.மு.க. கூட்ட ணியின் பலம் 24ஆக உள்ளது. காரைக்குடி நகர்மன்ற தலைவர் பதவி ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.36 உறுப்பினர்களில் 17பேர் ஆண்கள் மற்றும் 19பேர் பெண்களாவார்கள். நகர்மன்ற தலைவர் பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் நகர்மன்ற துணை தலைவர் பதவி பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலரான மகாலெட்சுமி கூறுகையில் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீட்டை அரசு அறிவித்தபோது பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டது.அதேபோல் காரைக்குடி நகராட்சியில் ஆண்களை விட பெண்கள் அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கு ஆண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால் துணை தலைவர் பதவியில் பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதே பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது என்றார்.