உள்ளூர் செய்திகள்
காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் லிங்கதிருமேனி மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு- பக்தர்கள் பரவசம்
காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் லிங்கதிருமேனி மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நாளையும், நாளை மறுநாளும் இந்த அதிசயம் நடைபெறும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கடை வீதியில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மூலவர் லிங்கதிருமேனி மீது சூரிய ஒளி நேரிடையாக விழும்.
அதேபோல இந்தாண்டு மூலவர் லிங்க திருமேனி மீது சூரியஒளி கதிர்கள் நேரிடையாக விழும் அற்புத நிகழ்வு இன்று காலை நிகழ்ந்தது.
இந்த அற்புத காட்சியை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் அதிகாலை முதல் குவிந்து இருந்தனர். இந்த அற்புத நிகழ்வு இன்று அதிகாலை 6.40 க்கு நிகழ்ந்தது. சூரியன் உதித்ததும் சூரிய கதிர்கள் கோவில் கருவறை உள்ளே படர ஆரம்பித்ததும் கூடியிருந்த சிவ பக்தர்கள் ஹரஹர மகாதேவா ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமசிவாய ஓம் சிவாயநம என விண்ணதிர கோஷம் முழங்கி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த அற்புத நிகழ்வு சிறிது நேரம் நீடித்தது. நாளையும், நாளை மறுநாளும் இந்த சூரிய ஒளிக்கதிர் லிங்கத் திருமேனி மீது படரும் அதிசயம் நடைபெறும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.