உள்ளூர் செய்திகள்
7 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 7 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. பேரூராட்சிகளிலும் வெற்றிவாகை சூடியது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் மானாமதுரை தற்போதுதான் முதன்முறையாக நகராட்சியாக மாறியுள்ளது. இங்கு நடைபெற்ற தேர்தலில் 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களையும், காரைக்குடியில் 36 வார்டுகளில் 18 வார்டுகளையும், மானாமதுரையில் 27 வார்டுகளில் 14 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது.
தேவகோட்டை நகராட்சியில் தி.மு.க.விற்கு 5 இடங்கள் கிடைத்தன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் இந்த நகராட்சியை கைப்பற்றுவது யார்? என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு இருக்கிறது. அ.ம.மு.க. ஆதரவை பொறுத்துதான் நகராட்சியை கைப்பற்றுவது யார் என தெரியவரும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 117 வார்டுகளில் 48 வார்டுகளை தி.மு.க. வென்றுள்ளது.
இதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தி.மு.க. அதிகஅளவில் வெற்றி பெற்றுள்ளது. திருப்பத்தூரில் 14 இடங்களையும், நாட்டரசன்கோட்டையில் 6 இடங்களையும், இளையான்குடியில் 10 இடங்களையும், கானாடுகாத்தான் 7 இடங்களையும், புதுவயலில் 8 இடங்களையும், நெற்குப்பையில் 9 இடங்களையும், கண்டனூரில் 7 இடத்தையும், சிங்கம்புணரியில் 14 இடத்திலும், கோட்டையூரில் 7 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்த பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதால் தலைவர், துணைத்தலைவர் பதவி தி.மு.க. வசமே செல்லும். பள்ளத்தூர் பேரூராட்சியில் தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், சுயேட்சைகள் 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவை பொறுத்து தான் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவி யாருக்கு? கிடைக்கும் என்பது தெரியவரும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகளையுமே தி.மு.க.தான் கைப்பற்றியுள்ளது. பரமக்குடியில் 19 இடங்களை வென்றுள்ள தி.மு.க. 53 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்ற தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளது. கீழக்கரை நகராட்சியில் தி.மு.க. 13 வார்டுகளில் வெற்றி பெற்றிருப்பது தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 33 வார்டுகளில் 23 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ராமேசுவரம் நகராட்சியில் தி.மு.க. 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பேரூராட்சிகளில் சிலவற்றை சுயேட்சைகள் கைப்பற்றி உள்ளன. குறிப்பாக சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளையும் சுயேட்சை வேட்பாளர்களே கைப்பற்றி உள்ளன. இதில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட கருப்பண்ணன், அவரது மனைவி மீனாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
தொண்டி பேரூராட்சியில் 4வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, சுயேட்சை வேட்பாளர் சமயராணி ஆகியோர் தலா 186 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். அங்கு குலுக்கல் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார். பரமக்குடி நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த 3 பெண்கள் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சி சீட் வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடியுள்ளனர்.