உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கு நாளை மறுதேர்தல்

Published On 2022-02-23 09:29 IST   |   Update On 2022-02-23 11:41:00 IST
புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. வார்டு வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை எடுத்து சென்று அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது 4-வது வார்டு எண்ணிக்கை வரும் போது இந்த வார்டுக்கான மின்னணு வாக்கு பதிவு எந்திரம் இயங்கவில்லை. அதிகாரிகள் மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்துவிட்டு மற்ற வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

அனைத்து வார்டுகளுக்கான எண்ணிக்கை முடிந்த பிறகு மாலை 4-வது வார்டு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை எடுத்து எண்ண முயன்றனர். அப்போதும் இயங்கவில்லை. தொழில்நுட்ப அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. ஆனாலும் சரியாகவில்லை. இதைனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவருமான பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் கமி‌ஷன் உத்தரவுபடி நாளை (24-ந் தேதி) மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 4-வது வார்டுக்கு நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா தொற்றாளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும். அன்றுமாலை 6 மணிக்கு ஓட்டு பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தி தேர்தல் முடிவுகள் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவினை தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்து உள்ளது.


Similar News