உள்ளூர் செய்திகள்
பாபநாசம் பகுதியில் கரும்பு பயிர் வகை பயிர்கள் ஊடுபயிர் செய்யப்பட்டுள்ளது.

கரும்பில் பயறு வகைகளை ஊடுபயிர் செய்தால் அதிக லாபம் பெறலாம்

Published On 2022-02-22 08:18 IST   |   Update On 2022-02-22 08:18:00 IST
கரும்பில் பயறு வகைகளை ஊடுபயிர் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
பாபநாசம்:

பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் கூறியுள்ளதாவது:

நடப்பு பருவத்தில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு அதிக இடைவெளியுடன் பயிரடப்படும் பயிர் என்பதினால் ஊடுபயிர் செய்து கூடுதல் வருவாய் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு குறைந்த அளவு நிலத்தில் ஊடுபயிர் செய்வதினால் அதிக லாபம் பெறலாம்.

தற்பொழுது நிலவிவரும் பருவகாலம் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு உகந்ததாக இருப்பதினால் அனைவரும் கரும்பில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யலாம். 

மேலும் பயறுவகை பயிர்கள் உற்பத்தி குறைந்துவரும் இத்தருனத்தில் பயறுவகை பயிர்கள் ஊடுபயிர் செய்யும் பொழுது சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது. ஊடுபயிர் செய்வதினால் மண்வளம் அதிகரிப்பதோடு மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. 

கரும்பு பயிரில் பயறுவகை பயிர்கள் ஊடுபயிர் செய்யும் பொழுது அவற்றின் மஞ்சள் நிற பூக்களினால் அதிக அளவு நன்மை செய்யும் பூச்சிகள் கவரப்பட்டு பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது. கரும்பில் இடைவெளியில் ஊடுபயிர் செய்வதினால் களைகள் முளைப்பது தடுக்கப்படுகிறது.

பயறுவகை பயிர்கள் ஊடுபயிர் செய்யும் பொழுது கரும்பு பயிருக்கு தையோபென்கார்ப் என்ற களைக்கொல்லி களை முளைப்பதற்கு முன் ஒரு எக்டருக்கு 1.25 கிலோ என்ற அளவில் தெளிப்பதினால் மிகச்சிறந்த முறைகள் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

கரும்பில் ஊடு பயிர் செய்யும்போது அட்ரசின் களைக்கொல்லி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

எனவே நமது பகுதியில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பயறுவகை பயிர்கள் ஊடுபயிர் செய்வதற்கான ஆடுதுறை 5 மற்றும் வம்பன் 8 உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்திலும், ரைசோபியம் மற்றும் கரும்பில் இடைக்கணுப் புழுவை கட்டுபடுத்தும் ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவை 
50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது. 

இந்த வாய்பினை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என கூறியுள்ளார்.

Similar News