உள்ளூர் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4 இடங்களில் நாளை நடக்கிறது.
திருப்பத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 66.96 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு நிறைவுபெற்றவுடன், போலீசார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்தப்பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைத்தனர்.
சிவகங்கை , மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட மற்றும் இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகங்கையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட மற்றும் கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல் ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காரைக்குடியில் உள்ள அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும், தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன.
நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிப்படுவது மட்டுமின்றி போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 4 மையங்களிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகின்றன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி மற்றும் கோட்டையூர் , பள்ளத்தூர், கானாடுகாத்தான், கண்டனூர், புதுவயல் பேரூராட்சிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் காரைக்குடி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதனை கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் தேர்தல் அலுவலர்கள் சரிபார்த்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணும் மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் பாதுகாப்பு அறை, கண்காணிப்பு பகுதியை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டரின் இந்த ஆய்வின்போது வட்டார தேர்தல் அலுவலர் சாந்தி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், திருப்பத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் பேரூராட்சி செயல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், துணை அலுவலர்கள் திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் மன்சூர்அலி, காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.