உள்ளூர் செய்திகள்
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை வழங்கினார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்கு 2 ஆயிரம் போலீசார்

Published On 2022-02-18 16:19 IST   |   Update On 2022-02-18 16:19:00 IST
கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கடலூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் நாளை (19 -ந் தேதி) 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் நடைபெற உள்ளன.

இதனையொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் மாவட்டம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் அதிகமாக பிரச்சினைக்குரிய இடங்களில் கண்டறிந்து பிரச்சினைகள் நடக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் எடுக்கப்பட்டு வருகின்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், ஜெயச்சந்திரன் தலைமையில் 11 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 55 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 400 ஊர்க்காவல் படையினர் என 2,000 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 715 வாக்குச்சாவடிகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு சேர்க்க இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 57 மொபைல் பார்ட்டிகள் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போலீஸ் நிலைய பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Similar News