உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேப்பூர் அருகே 50 பவுன் நகை தர மறுத்த மாமியார்- வீட்டை எரித்த மருமகன்

Published On 2022-02-17 04:04 GMT   |   Update On 2022-02-17 04:04 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 50 பவுன் நகை தர மறுத்த மாமியாரின் வீட்டை மருமகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அவரது மனைவி ஜோதி (வயது79). இவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

ஜோதியின் மூத்த மகள் வினோ தச்செல்வியை (45) அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் (59) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று மதியம் ஜெயவேல் தனது மாமியார் ஜோதியிடம் சென்று தனக்கு 50 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் வாங்கித்தர வேண்டும் எனக்கூறி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே உனக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளேன். தற்போது என்னிடம் பணம், நகை இல்லை. நானே வயதாகி தனிமையில் வசித்து வருகிறேன் எனக் கூறி நகை, பணம் தர மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஜெயவேல், ஜோதி வசித்து வந்த கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்தஜோதி அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார்.

தகவல் அறிந்த வேப்பூர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இது குறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர்.
Tags:    

Similar News