நெல்லிக்குப்பத்தில் பறக்கும் படை அதிரடி வாகன சோதனையில் சிக்கிய ரூ. 1 லட்சம் பணம்
கடலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி மாவட்டம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் பின்புறம் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் வாகனம் முழுவதும் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து எண்ணிப் பார்த்தபோது ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 320 ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று பறக்கும் படை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி எடுத்து வந்த 33 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.