உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

கடலூர் மாவட்டத்தில் 410 வாக்குசாவடிகள் பதட்டமானவை

Published On 2022-02-15 15:32 IST   |   Update On 2022-02-15 15:32:00 IST
கடலூர் மாவட்டத்தில் 726 வாக்குச்சாவடி மையங்களில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.
கடலூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் வாக்குச்சாவடி மையங்கள், வாக்குச் எண்ணும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடலூர் மாவட்ட எல்லையான ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இன்று காலை திடீரென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை போலீசார் எவ்வாறு சோதனை செய்கின்றனர்? ஏதேனும் சந்தேகப்படும் படியான வாகனங்கள் வருகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை துணைத்தலைவர் அறிவுறுத்தலின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகின்றோம்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த ஏதேனும் ஜாதி கலவரம், ஊர் தகராறு போன்றவற்றை கணக்கில் எடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். மேலும் அந்தப்பகுதி முழுவதும் பதற்றமானவை என கணக்கீடு எடுத்து போலீசார் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர். இது மட்டுமன்றி குடிபோதையில் தகராறுகள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இது மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தொடர் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தி வருகின்றோம். இதுமட்டுமின்றி தேர்தல் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தேர்தல் மற்றும் மாசி மக விழா சேர்ந்து நடைபெற உள்ளதால் குறிப்பாக புதுச்சத்திரம், பெரியபட்டு, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, திட்டக்குடி விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக போலீசாரை நியமனம் செய்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 726 வாக்குச்சாவடி மையங்களில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இங்கு கூடுதலாக போலீசார் நியமித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளோம். ஆகையால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Similar News