உள்ளூர் செய்திகள்
கடலூர் பகுதிகளில் சிக்னல் கோளாறு: ராமேஸ்வரம்- அயோத்தியா ரெயில் தாமதம்
கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் அரைமணிநேரம் இவ்வழியாக செல்லும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தது.
கடலூர்:
ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தியாவிற்கு கடலூர் வழியாக ரெயில் சென்று வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து வழக்கம்போல் இன்று காலை கடலூர் முதுநகர் வழியாக அயோத்தியாவிற்கு செல்வதற்காக ரெயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கடலூர் கம்மியம்பேட்டை அருகே சிக்னல் கோளாறு திடீரென்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடலூர் முதுநகர் பகுதியில் ரெயில் நின்றது. இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் சுமார் அரை மணி நேரம் சிக்னல் கோளாறை சரி செய்தனர். பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்தபோது மீண்டும் கம்மியம்பேட்டை பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில் அங்கிருந்து புறப்படாமல் மீண்டும் நின்றது. இதனை தொடர்ந்து மீண்டும் ரெயில்வே ஊழியர்கள் கம்மியம் பேட்டை பகுதியில் சிக்னல் கோளாறை சரி செய்தனர்.
ஆனால் ரெயில் வருவதற்காக கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் அரைமணிநேரம் இவ்வழியாக செல்லும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தது. மேலும் காலை நேரம் பள்ளி வாகனங்கள் அதிக அளவில் காத்திருந்ததால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதியடைந்த நிலையில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதி அடைந்து வந்ததை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக கேட்டை திறந்து பொதுமக்களை மற்றும் வாகனங்களை அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிக்னல் கோளாறு சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டதால் மீண்டும் ரயில்வே கேட் மூடப்பட்டு ரெயில் சென்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்படும் சமயத்தில் வரக்கால்பட்டு, வெள்ளக்கேட் ஆகிய பகுதிகளில் ரெயில்வேகேட் முன்னதாகவே மூடப்பட்டு இருந்தது.