கடலூர் மாநகராட்சி தேர்தல்- வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்
கடலூர்:
நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன் தலைமையில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரத்தில் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள 152 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் மேற்பார்வையில் 121 பணியாளர்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.