உள்ளூர் செய்திகள்
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

Published On 2022-02-11 16:17 IST   |   Update On 2022-02-11 16:17:00 IST
சிவகங்கையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கான அலுவலர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட  கலெக்டர் மதுசூதன்ரெட்டி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறுகையில்,மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிற்கிணங்க, வருகின்ற 19.2.2022 அன்று நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறு கிறது. அன்றையதினம் வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ளவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையானப் பயிற்சி வழங்கப்படுகிறது.அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு 420 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.

இதற்காக 1,563 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணி மேற்கொள்ள உள்ளார்கள். இவர்களுக்கு கடந்த வாரம் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட பயிற்சியாக சிவகங்கை நகராட்சி, மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி, திருப்புவனம் பேரூராட்சி, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி ஆகியப் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காரைக்குடி  நகராட்சி, தேவகோட்டை நகராட்சி மற்றும் கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும், வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு காரைக்குடி ஆர்.எம்.எஸ்.இராமனாதன் செட்டியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் பயற்சி வகுப்பு நடைபெறுகின்றன. 

இதனைத்தொடர்ந்து, 18.2.2022 அன்று அலுவலர்கள் பணி மேற்கொள்ள உள்ள இடம் குறித்து அறிவித்து, 3ஆம் கட்ட பயிற்சி வழங்கப்படும்.

இந்த பயிற்சியின் போது, பணி மேற்கொள்ளும் அலுவலர்கள், பணியாளர் கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியின் செயல்பாடு குறித்து பயிற்சி வகுப்பில் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்கள் இருந்தால் பயிற்சி வழங்குபவரிடம் முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 

வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்வது என்பது மிக முக்கியமான பணியாகும். அத்தகைப் பணியை சிறப்புடன் முடித்திடும் வகையில் கவனமுடன் செயலாற்றிட வேண்டும். எனவே, ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணித்தன்மைக்கு ஏற்ப, நன்கு தெரிந்து கொண்டு சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றார். 

இந்த ஆய்வின்போது, மானாமதுரை நகராட்சி (பொறுப்பு) மற்றும் சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தேர்தல் பணியாளர்களுக்கான பொறுப்பு அலுவலர் வீரராகவன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழரசன், சுந்தரமகாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News