உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

Published On 2022-02-11 14:55 IST   |   Update On 2022-02-11 14:55:00 IST
குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
குத்தாலம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திடீரென பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உதயநிதியின் பேச்சை கேட்பதற்காக குத்தாலம் கடைவீதியில் கூடினர். மதியம் 2 மணி அளவில் குத்தாலத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் உள்ளே அமர்ந்தபடியே 2 நிமிடங்கள் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் சட்டமன்றத் தேர்தல் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற பிரச்சாரத்தின்போது காவல்துறையால் குத்தாலத்தில் இதே இடத்தில் என்னை கைது செய்து இப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள்.

அதன்பின் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தோம். தற்போது உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். 

தஞ்சை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு தற்போது குத்தாலம் வந்துள்ளேன்.

முதல்வர் ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை உங்களிடம் ஒப்படைத்து உள்ளார். தேர்தலுக்கு முன்பு 
உள்ள 9 நாட்களில் தீவிர பிரச்சாரம் செய்து முதலமைச்சரின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி 
வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

Similar News