உள்ளூர் செய்திகள்
மாசிமக திருவிழாவை முன்னிட்டு அய்யனார் குதிரை சிலைக்கு மாலை தயாரிக்கும் பணி தீவிரம்
குதிரை சிலைக்கு அணிவிப்பதற்கான காகித பூ மாலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகத்திருவிழா நடைபெறும். அப்போது 35 அடி உயர குதிரை சிலைக்கு காகித பூ மாலைகள் பக்தர்கள் காணிக்கையாக அணி விப்பது வழக்கம்.
கிராமத்தின் சார்பில் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து முதல் மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பக்தர்கள், மலர்கள், பழங்கள் கட்டப்பட்ட மாலை அணிவிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கான மாலைகள் அணிவிக்கப் படுவதால் அதனைக்காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மாசிமகத் திருவிழா வருகிற 17ம்தேதி நடக்கிறது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கீரமங் கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மரமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திரு நாளூர், திருச்சிற்றம்பலம் உள்பட பல்வேறு கிராமங்களில் பிரம்மாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலை கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது
மேலும் கூட்டத்தை தவிர்ப்பதற்காகவும், பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு வசதியாக மாசிமக திருவிழா 17-ம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 16ம் தேதி காலையிலேயே கிராமத்தின் சார்பில் முதல் மாலை அணிவித்து தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.