உள்ளூர் செய்திகள்
கைது

காரைக்குடியில் ரூ.40 கோடி மோசடி புகாரில் பட்டதாரி வாலிபர் கைது

Published On 2022-02-11 12:07 IST   |   Update On 2022-02-11 12:07:00 IST
காரைக்குடியில் ரூ.40 கோடி மோசடி புகாரில் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

காரைக்குடி டி.டி.நகரை சேர்ந்தவர் சோமகணேசன் (35). எம்.பி.ஏ பட்டதாரி. இவர் காரைக்குடி 100 அடி ரோட்டில் ‘கேப் ஸ்டாக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தை தரகராக இருந்தார். உறவினர்கள் மற்றும் படித்த நண்பர்களிடம் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் 60-க்கும் மேற்பட்டோரிடம், ரூ 40 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்கிடையில் தன்னிடம் வாங்கிய பணத்தை சோம கணேசன் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என காரைக்குடியை சேர்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவான சோம கணேசனின் மனைவி வள்ளியம்மை தனது கணவரை காணவில்லை என கூறி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் சோமகணேசன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோமகணேசனை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து காரைக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சோம கணேசன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும் பலர் சோம கணேசன் மீது புகார் அளித்து வருகின்றனர். காரைக்குடியில் தொடர்ச்சியாக இதுபோல் நிதி மோசடி புகார்கள் எழுந்து மக்கள் ஏமாந்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News