உள்ளூர் செய்திகள்
மீனவர் பலி

சிதம்பரம் அருகே கடல் சீற்றத்தால் படகு விபத்து - மீனவர் பலி

Published On 2022-02-10 17:38 IST   |   Update On 2022-02-10 17:38:00 IST
சிதம்பரம் அருகே கடல் சீற்றத்தால் ஏற்பட்ட படகு விபத்தில் மீனவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 45). மீனவர். இவர் விசைப்படகில் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றார். மீன்பிடித்து விட்டு பாஸ்கர் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பெத்தோடை முகத்துவாரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தில் படகு சிக்கியது. தொடர்ந்து கடல் சீற்றத்தில் சிக்கிய படகு சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டு தரை தட்டியது.

அப்போது படகில் இருந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக பாஸ்கரின் மார்பில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த பாஸ்கர் வலியில் அலறி துடித்தார். உடனே பாஸ்கரை மற்ற மீனவர்கள் மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட பாஸ்கர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News